பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரான விமல் வீரவன்ச.!!!
கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கான காரணம் தொடர்பில் விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ விளக்கமளித்தார்.
தனது கட்சிக்காரரின் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாக சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை தொடர்பான நடவடிக்கையை நாளை (22) சீராய்வு மனு (Motion) ஊடாக மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம அறிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கில் விமல் வீரவன்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததன் காரணமாக அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான விமல் வீரவன்ச தொடர்பில் அவரது சட்டத்தரணி முன்வைத்த விளக்கத்தை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.