ஒக்டோபர் எரிபொருள் விலைத் திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம்; ஜனாதிபதி அறிவிப்பு.!!!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருள் விலைத் திருத்தத்தின் போது, மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், உலகச் சந்தையில் எண்ணெய் விலை ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட மட்டத்திற்கு மீண்டும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை உள்நாட்டில் முழுமையாக மக்கள் மீது சுமத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
டீசலுக்கு லீற்றருக்கு ரூ.100 நிவாரணம்
ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய நான்கு மாதங்களிலும் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் அரசாங்கம் 100 ரூபாய் நிவாரணம் வழங்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மீண்டும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செலவினங்களைக் கணக்கிடும் போது, எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும், எனினும் அரசாங்கம் நிவாரணம் வழங்கி அந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு மேலதிகமாக ரூ.50 நிவாரணம்
மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட டீசல் நிவாரணத்திற்கு மேலதிகமாக ஒரு லீற்றருக்கு 50 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 25 லீற்றர் வீதம், மாதத்தில் 25 நாட்களுக்கு மொத்தம் 625 லீற்றருக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஒருவருக்கு மாதாந்தம் சுமார் 31,250 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களைப் பாதுகாப்பதும், அவர்களின் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான வாய்ப்பை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் இயல்புக்கு மாறான நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே இவ்வாறான நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும், எரிபொருள் விலை மீண்டும் சாதாரண நிலைக்கு வந்தால் நிவாரணம் வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், விலை உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், அரசாங்கம் நிவாரணம் வழங்கும் எனவும், மின்சாரக் கட்டணத்திற்கும் தற்போதும் அரசாங்கம் மானியம் வழங்கி வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.