இலங்கையிலிருந்து சென்ற முதல் ஹஜ் குழுவிற்கு: ஜித்தாவில் அமோக வரவேற்பு.!!!
இலங்கையிலிருந்து சென்ற 325 ஹாஜிகளைக் கொண்ட முதல் குழுவினர் இன்று (02) சனிக்கிழமை அதிகாலை சவூதி அரேபியாவின் ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
இதன் மூலம் இலங்கையின் இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை நடவடிக்கைகள் தொடங்கின. இவர்களுக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர்அமீர் அஜ்வாத் மற்றும் ஜித்தாவிலுள்ள பதில் கொன்சலேட் ஜெனரல் மபூஸா லாஃபிர் ஆகியோர் இலங்கை ஹாஜிகளை வரவேற்றனர்.
ஜித்தாவிலுள்ள கொன்சலேட் ஜெனரல் அலுவலகத்தின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டிற்கான இலங்கையின் ஹஜ் சேவை வழங்குநரான நியமிக்கப்பட்டுள்ள ரெஹ்லத் வ மனாஃபேயின் பிரதிநிதிகள் மற்றும் ‘நுசுக்’ ஹஜ் செயல்பாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை ஹாஜிகளை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இங்கு உரையாற்றிய தூதர் அமீர் அஜ்வாத், ஹாஜிகளுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஹஜ் யாத்திரையின் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்.
இலங்கை உட்பட உலகம் முழுவதிலுமிருந்து சவூதிக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான ஹாஜிகளின் நல்வாழ்வையும் வசதியையும் உறுதி செய்வதற்காக வழங்கப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் சிறப்பான வசதிகளுக்காக, இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ஆகியோருக்கு தூதுவர் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இலங்கை ஹாஜிகள் தங்களது ஹஜ் கடமையைச் சிறப்பாகவும் நல்ல முறையிலும் நிறைவேற்றுவதற்கு உதவ ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகமும், ஜித்தாவில் உள்ள ஜித்தாவிலுள்ள கொன்சலேட் ஜெனரல் அலுவலகமும் தயாராக உள்ளதாக தூதர் மேலும் தெரிவித்தார்.
இந்த வருட ஹஜ்ஜிற்காக 3,500 இலங்கை ஹாஜிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கடமை வெற்றிகரமாக முன்னேடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இலங்கை ஹஜ் தூதுக் குழு, சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு, சவூதி சேவை வழங்குநர் மற்றும் உள்ளூர் பயண ஏற்பாட்டாளர்கள் ஆகியோரிடையே நெருங்கிய ஒத்துழைப்புடன் இந்த ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.







