படகு ஓட்டப் போட்டியில் குழு மோதல்: இளைஞர் மீது கொடூர தாக்குதல்; ஒருவர் கைது.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் நடைபெற்ற படகு ஓட்டப் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில், முகத்துவாரத்தைச் சேர்ந்த ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின் ஆரம்பகட்ட தகவல்களின் படி, ஏற்கனவே முகத்துவாரத்தைச் சேர்ந்த ஒருவர், வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படகு ஓட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முகத்துவாரத்தைச் சேர்ந்த நபர் பயணித்துக் கொண்டிருந்த படகிலிருந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்து, வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த குழுவினர் இருந்த மற்றொரு படகிற்குள் கொண்டு சென்று, கோடரி, தடிகள் மற்றும் ஹெல்மெட்டுகளால் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் முதலில் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கற்பிட்டி பொலிஸார் உடனடியாக தலையிட்டு தாக்கப்பட்ட நபரை மீட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


