கொழும்பை அதிரவைத்த; ‘ரட்டம எக்கட’ தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பேரணி.!!!
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (26) கொழும்பில் ‘ரட்டம எக்கட’ (Ratama Ekata) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இளைஞர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். ‘ஐஸ்’ (Crystal Meth), ஹெரோயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப்பொருட்களையும் முற்றாக ஒழித்து, போதைப்பொருள் இல்லாத இலங்கையை உருவாக்குவோம் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்தப் பேரணியின் முக்கிய நோக்கமாக இருந்தது.
அரசாங்கத்தின் ‘ரட்டம எக்கட’ தேசிய வேலைத்திட்டம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கிராம மட்டத்தில் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தி, இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதையும் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய நடவடிக்கையின் மூலம் இதுவரை சுமார் 10 மெட்ரிக் டன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2,100 கிலோகிராம் ‘ஐஸ்’, 1,950 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 5,800 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








