கிழக்கு மாகாண மதுவரித் திணைக்களத்தின் விசேட கூட்டம் மட்டக்களப்பில்.!!!
●மதுவரி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் சட்டவிரோத மதுபான உற்பத்தியை கட்டுப்படுத்தவும் ஆலோசனை.
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன அவர்களின் தலைமையில், கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் நேற்று (12) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் எம்.பி. விஜேரத்ன அவர்களின் மேற்பார்வையிலும், மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் எஸ்.டி. சேனக சில்லா அவர்களின் ஏற்பாட்டிலும் இக்கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தின் போது மதுவரித் திணைக்களத்தின் கணக்காய்வு நடவடிக்கைகள், கடந்த ஆண்டின் செயற்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், கிழக்கு மாகாணத்தில் மதுவரி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துதல், சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை முற்றாகக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, அதிகாரிகள் தங்களது தொழில் ரீதியான சவால்கள் மற்றும் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அவற்றை ஆராய்ந்த ஆணையாளர் நாயகம், சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுப்பதற்காக விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் மதுவரித் திணைக்களத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கமைப்பு பிரதி ஆணையாளர் திஸ்ஸகுமார, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் மதுவரி நிர்வாகத்தை திறம்பட முன்னெடுத்து, சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய கலந்துரையாடலாக இக்கூட்டம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.





