அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் காத்தான்குடி விஜயம்: IWARE அமைப்புடன் முக்கிய சந்திப்பு.!!!
இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று (11) காத்தான்குடிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) அமைப்பின் காரியாலயத்திற்கு விஜயம் செய்தனர்.
இவ்விஜயத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், அரசியல் பிரிவின் இரண்டாம் செயலாளர் மெத்யூ லார்ட், அரசியல் மற்றும் பொது இராஜதந்திர அதிகாரி சில்வெஸ்டர் வேர்திங்டன் உள்ளிட்ட உயர்ஸ்தானிகராலய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
விஜயத்தின் போது IWARE அமைப்பின் நிர்வாகத்தினருடன் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண பெண்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள், அவர்களின் அதிகாரமளித்தல் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், கிழக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வாதாரச் சூழல், சமூக எதிர்நிலைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் IWARE அமைப்பிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய தளமாக இச்சந்திப்பு அமைந்ததுடன், பெண்களின் அதிகாரமளித்தலை ஊக்குவிக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்து வரும் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக IWARE அமைப்பினர் அறிந்துகொள்ளவும் இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
இச்சந்திப்பில் IWARE அமைப்பின் தலைவி அனீஸா பிர்தெளஸ், பொருளாளர் ஜெம்ஹுத்நிஷா மஸூத் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

