கடலில் மூழ்கிய 11 வயது சிறுவன்;துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் உயிர்காப்பு வீரர்கள்.!!!
மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கண்டி மாவட்டம் கொப்பேகடுவ, யாலத்தென்ன பகுதியைச் சேர்ந்த குழுவினர் நேற்று (24) பிற்பகல் பொல்ஹேன கடற்கரைக்கு சுற்றுலாவாக வந்திருந்தனர்.
அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த சுமார் 11 வயதுடைய சிறுவன், பலத்த அலைகளால் கரைக்குத் திரும்ப முடியாமல் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து கடற்கரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக கடலுக்குள் சென்று சிறுவனை மீட்டு கரைக்குக் கொண்டு வந்ததுடன், முதலுதவி சிகிச்சை வழங்கி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த துரித நடவடிக்கையால் சிறுவனின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.