நீரில் தத்தளித்த பெண்; சில நிமிடங்களில் மீட்ட கடற்படை வீரர்கள்.!!!
– கற்பிட்டி எம். எச். எம். சியாஜ் –
பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் தியவன்னா ஓயாவில் விழுந்த பெண்ணொருவர் கடற்படை உயிர்காக்கும் குழுவினரால் இன்று (24) நண்பகல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
தியவன்னா ஓயாவின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு படகுப் படைப்பிரிவைச் சேர்ந்த உயிர்காக்கும் குழுவினர், ஜப்பான் நற்புறவு வீதியின் கிம்புலாவல பகுதிக்கு அருகிலுள்ள சதுன் உயன பகுதியில் ஒருவர் தியவன்னா ஓயாவில் விழுந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக மேற்கொள்ளப்பட்ட அவசர மீட்பு நடவடிக்கையின் மூலம், நீரில் மூழ்கிக்கொண்டிருந்த பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பெண் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரிதமாகச் செயற்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய கடற்படை உயிர்காக்கும் குழுவினரின் நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.


