ரூ.10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்டு உரிய பெண்ணிடம் ஒப்படைத்த இ.போ.ச. சாரதியும் நடத்துநரும்.!!!
பெண் பயணி ஒருவர் பேருந்தில் தவறவிட்ட சுமார் ரூ.10 இலட்சம் பெறுமதியான இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை மீட்டு, உரியவரிடமே ஒப்படைத்த இ.போ.ச. பேருந்தின் சாரதியும் நடத்துநரும் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை நோக்கிப் பயணிக்கும் 767ஆம் வழித்தடத்தைச் சேர்ந்த 4241 இலக்க இ.போ.ச. பேருந்தில் மதிய நேர சேவையின்போது குறித்த பெண் பயணித்துள்ளார்.
வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மரணச் சடங்கொன்றில் கலந்துகொண்ட பின்னர், அவர் மற்றுமொரு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரே தனது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலி காணாமல் போனதை அவர் உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து, தான் பயணித்த வழித்தடத்தில் சங்கிலியைத் தேடியபோதும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சங்கிலி கிடைக்காது என்ற கவலையுடன், மீண்டும் வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணிக்க அதே பேருந்தில் ஏறியுள்ளார்.
இதன்போது, தனது தங்கச் சங்கிலி காணாமல் போனமை குறித்து பேருந்தின் நடத்துநர் மற்றும் சாரதியிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, “நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது. அதனை கண்டெடுத்து பத்திரமாக வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்த அவர்கள், சங்கிலியை உரிய பெண்ணிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.
பெண் பயணியின் பெறுமதியான நகையை மீட்டு, எவ்வித சுயநலமும் இன்றி உரியவரிடம் ஒப்படைத்த இ.போ.ச. பேருந்தின் சாரதியும் நடத்துநரும் தங்களது நேர்மையான செயலால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளனர்.
– கஜிந்தன்