இன்டர்போல் சிவப்பு அறிவித்தலுடன் தேடப்பட்ட “பஸ் லலித்”: இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!!!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் லலித் கன்னங்கர எனப்படும் “பஸ் லலித்”, துபாயில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று (25) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பஸ் லலித், கொலை, கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரான இன்டர்போல் (Interpol) அமைப்பின் சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



