கடற்படையின் அதிரடி சோதனையில் சிக்கிய சட்டவிரோத கடல் அட்டை கடத்தல்; சந்தேகநபர் கைது.!!!
– கற்பிட்டி எம். எச். எம். சியாஜ் –
கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை (24) கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் புவனேக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, கிராஞ்சி கடற்கரைப் பகுதிக்கு வந்துகொண்டிருந்த தெப்பப் படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, அனுமதியின்றி கடல் அட்டைகளை தரைப்பகுதிக்கு கடத்திச் சென்றதாகக் கூறப்படும் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த தெப்பப் படகில் இருந்து சுமார் 380 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டதுடன், கடல் அட்டைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தெப்பப் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் தெப்பப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
