சகோதரியுடன் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுமி நீரோடையில் விழுந்து மரணம்.!!!
-கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்-
புத்தளம், நாகவில்லு கிராமத்தில் நீரோடையில் தவறி விழுந்து இரண்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாகவில்லுவைச் சேர்ந்த ஹஸ்பான் இப்னு ஹனீஸ் – சியாதா தம்பதியினரின் இளைய மகளான ஹஸ்பான் செஷால் லயால் என்ற இரண்டு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினம் காலை சுமார் 10 மணியளவில், தனது வீட்டுக்கு முன்னால் அமைந்துள்ள பெரிய தாயின் வீட்டுத் தோட்டத்தில், தனது நான்கு வயது மூத்த சகோதரியான ஹனீஷா லயாலுடன் சிறுமி விளையாடிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, வீட்டுத் தோட்டத்திற்கு அருகிலிருந்த நீரோடைக்குச் சென்ற சிறுமி எதிர்பாராத விதமாகத் தவறி நீரோடைக்குள் விழுந்துள்ளார். நீரோட்டத்தில் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி, அங்கிருந்த புதர்களுக்கு இடையில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியைக் காணாத குடும்பத்தினர் பதற்றமடைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, நீரோடைக்கு அருகிலுள்ள புதர்களுக்கு இடையில் சிக்கியிருந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர், சிறுமி உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டு வயது பிஞ்சுக் குழந்தையின் எதிர்பாராத மரணம் நாகவில்லு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
