இலங்கையின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.!!!
இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், குருணாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (18) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று (19) அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ளும் வகையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.