ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி 2014 பிரிவினரின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடர்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் சீருடை வெளியீடு.!!!
-அக்ரம் லுதுபி-
கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 2014ஆம் ஆண்டுப் பிரிவினரின் நிறைவேற்றுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள B14 Boundary Bash Season 2 – 2026 கிரிக்கெட் தொடருக்கான ஊடக சந்திப்பு மற்றும் உத்தியோகபூர்வ சீருடை (Jersey) வெளியீட்டு விழா, ஒக்டோபர் 18ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு Excel World வளாகத்திலுள்ள Marco Polo Lounge இல் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் அதிபர் திருமதி சனியா டெயின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
மேலும், B14 தலைவர் தஸீர், யசீத் மற்றும் தமீம் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் SDC உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர்.
10 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்
இம்முறை நடைபெறவுள்ள B14 Boundary Bash Season 2 – 2026 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இத்தொடரின் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி வத்தளையில் அமைந்துள்ள Play On Indoor விளையாட்டு வளாகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளன.
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 2014ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த பழைய மாணவர்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துவதுடன், அவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கிலும் இக்கிரிக்கெட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், குறித்த கிரிக்கெட் தொடரின் மீது பழைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
பாடசாலை அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் முயற்சி
இந்தக் கிரிக்கெட் தொடரின் மூலம் கிடைக்கப்பெறும் அனைத்து வருமானங்களையும் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டின் ஊடாக பழைய மாணவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதுடன், தாம் கல்வி கற்ற பாடசாலையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி பாராட்டத்தக்கதாகும்.
B14 Boundary Bash Season 2 – 2026, விளையாட்டு, நட்பு, ஒற்றுமை மற்றும் கல்வி அபிவிருத்தி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக அமையவுள்ளது.






