பிரான்ஸில் வெடித்த வன்முறைப் போராட்டம்: 5.5 லட்சம் பேர் பங்கேற்பு; 1,200 பேர் கைது – 150 பொலிஸார் காயம்.!!!
பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, சிதிலமடைந்த உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. இப்போராட்டங்களில் சுமார் ஐந்தரை இலட்சம் பேர் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் 150 பொலிஸார் காயமடைந்துள்ளதாகப் பிரதமர் செபாஸ்டியன் லுகோர்னு தெரிவித்துள்ளார்.
போராட்டம் வெடித்ததற்கான காரணம் என்ன?
பிரான்ஸில் 15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் கல்வி பயிலும் மேல்நிலைப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து கடந்த சில வாரங்களாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனுடன் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிரான அதிருப்தியும் இணைந்துள்ளதால், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு போராட்டக் குழுக்களும் போராட்டங்களில் இணைந்துள்ளன. இதனால், ஆரம்பத்தில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நாடளாவிய ரீதியிலான பாரிய எதிர்ப்புப் போராட்டமாக மாறியுள்ளது.
பாரிஸில் பொலிஸாருடன் கடும் மோதல்
சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின்போது தலைநகர் பாரிஸில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலவரத் தடுப்புப் பொலிஸாருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கூட்டத்தினரைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களையும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், சில இடங்களில் கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லிமோஜ் நகரில் உள்ள நகர சபைக் கட்டடத்தின் கோபுரம் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ வைப்பு, கொள்ளை – பல பகுதிகளில் பதற்றம்
போராட்டத்தின் ஆரம்பத்தில் பாரிஸில் நடைபெற்ற முக்கிய பேரணி பெரும்பாலும் அமைதியான முறையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் அமைதியை விரும்புவதாகவும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் இளைஞர்கள் குழுவொன்று பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
எனினும், நேரம் செல்லச் செல்ல சில குழுக்கள் வீதிகளில் தீ மூட்டியதாகவும், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு சிலர் தடையாக இருந்ததாகவும் உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கடைகளில் கொள்ளையடிக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளிகளும் வெளியாகியுள்ளன. போராட்டத்தின் போது பாரிஸின் சில பகுதிகள் போர்க்களம் போன்று காட்சியளித்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
முகமூடி அணிந்த குழுக்களால் வன்முறை
சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின்போது தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகமூடி அணிந்த நபர்களால் இலக்கு வைக்கப்பட்ட வன்முறைச் செயல்கள் இடம்பெற்றதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் நிலைமை, வாழ்க்கைச் செலவின உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக ஆரம்பித்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளமை பிரான்ஸில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி வசதிகளின் குறைபாடு மற்றும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு ஆகிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய போராட்டங்கள், தற்போது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான முக்கிய சவாலாக மாறியுள்ளன.






