வியாபாரம் மட்டும் போதாது; கல்வியும் தொழில்நுட்ப அறிவும் அவசியம் – ஹிஸ்புல்லாஹ்.!!!
“கல்வி அறிவு இல்லாமல் எதிர்காலத்தில் எதையும் சாதிக்க முடியாது. மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்பட்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய வகையில் கல்வி முறை அமைய வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் மாதிரி சந்தை நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் எம்.எல். நிஜாம்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டம் 95 சதவீதத்திற்கும் அதிகமான சித்தி வீதத்தைப் பெற்று கோட்டத்தின் பாடசாலைகளில் முதலிடத்தைப் பெற்றமைக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும், எதிர்கால உலகில் வியாபாரத்தை மட்டும் நம்பி இருக்க முடியாது என்றும், கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவே மாணவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 34ஆவது இடத்தில் இருந்த இப்பாடசாலை, இவ்வாண்டு 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளமை பாராட்டத்தக்க சாதனை எனக் குறிப்பிட்ட அவர், அதிபர் எம்.எல். நிஜாம்தீன் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, சிறுவர்களின் தொழில்முனைவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறுவர் கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டு மாதிரி வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம். தாஹிர், பாடசாலை அதிபர்கள், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












