தேசியக் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிமாமணி ரீ.எல். ஜவ்பர்கானுக்கு காத்தான்குடியில் கௌரவிப்பு.!!!
–எம்.ரி.எம்.யூனுஸ்–
தேசிய மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த கவிமாமணி ரீ.எல். ஜவ்பர்கானைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (03) வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில், கதிரவன் பட்டிமன்ற பேரவையின் ஒளவை அவை நடத்திய தேசிய மட்டக் கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற கவிமாமணி ரீ.எல். ஜவ்பர்கானை கௌரவிக்கும் இந்நிகழ்வை காத்தான்குடி கலை, கலாசார, இலக்கியக் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது.
பாவலர் சாந்தி முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.
மேலும், சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் மற்றும் பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம். ஜெஸீம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசிய அளவில் சாதனை படைத்த கவிமாமணி ரீ.எல். ஜவ்பர்கான் அவர்களுக்கு பிரதம அதிதியினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துப்பா வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் நகரசபை உறுப்பினர் றுஸ்வின் பொன்னாடை போர்த்தி கவிஞரை கௌரவித்தார்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், ஐய்யம் தெளி அரங்கு, “ஐவர் கவியரங்கு” நிகழ்ச்சி, பாடல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு கலை இலக்கிய அம்சங்கள் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.



















