கல்விச் சாதனையால் காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த ஹிழுறிய்யா மாணவர்களுக்கு பாராட்டு.!!!
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தையும் மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்த காத்தான்குடி மட்/மம ஹிழுறிய்யா வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் “மாபெரும் மாணவர் கௌரவிப்பு விழா” இன்று (02) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி யூ.எம்.எப். பஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு சிறப்பு அதிதியாக பங்கேற்றார்.
நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்று காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இப்பாடசாலையை கல்வி, விளையாட்டு, கலாசாரம், நிர்வாகம் மற்றும் பௌதீக வளங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற முன்னாள் அதிபர் எஸ்.ஜே. யாஸிர் அரபாத் அவர்களின் அர்ப்பணிப்பான சேவை பாராட்டுக்குரியது என்றும், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்களின் ஒற்றுமையான பங்களிப்பே இவ்வெற்றிக்கான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்கள் கல்விக்கு முன்னுரிமை அளித்து உயர்கல்வியுடன் தொழில்நுட்ப அறிவையும் பெற்றவர்களாக உருவாக வேண்டும் என்றும், உலகளாவிய தொழில்சந்தைகளில் போட்டியிடக்கூடிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் கல்வி அமைப்பு அமைய வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக இதுவரை பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் பாடசாலையின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தொடர்ந்தும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வின் நிறைவில், இச்சிறப்பான கல்விச் சாதனைக்கு பங்களித்த முன்னாள் அதிபர் எஸ்.ஜே. யாஸிர் அரபாத், ஆசிரியர்கள் மற்றும் சாதனை மாணவர்கள் பிரதம அதிதிகளால் நினைவுச் சின்னங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகர சபை உறுப்பினர்கள், கல்வி வலய அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.





