கிழக்கு மாகாண ஆயுர்வேத சேவைகள் டிஜிட்டல் மயமாக்கம்: “eAyurvedic” செயலி அறிமுகம்.!!!
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை “eAyurvedic” செயலி ஊடாக டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கணினிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (03) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் யூ.எல். நிகாயா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர் எம்.ஏ. நபீல் பிரதம அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் பாலமுரளி, “eAyurvedic” செயலியின் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


