கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: இரு இளைஞர்கள் காயம்; ஒருவர் கவலைக்கிடம்.!!!
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) இரவு இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பூநகரைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் முதலில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தோப்பூர் – பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றுமொரு இளைஞர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துடன் தொடர்புடைய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

