நிலக்கரி விவகாரம்: அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இழப்பு இல்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க.!!!
தரம் குறைந்த நிலக்கரி விநியோகிக்கப்பட்டமை காரணமாக ஏற்பட்டதாக கூறப்படும் நிதி இழப்பு அரசாங்கத்தையோ பொதுமக்களையோ பாதிக்கவில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகல் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
நிலக்கரியை வழங்கிய நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய சுமார் 915 கோடி ரூபா தொகையை எரிசக்தி அமைச்சு தற்போது நிறுத்தி வைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்பட்ட சேதம் சுமார் 800 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் தன்வசம் வைத்துள்ள 915 கோடி ரூபா தொகையின் மூலம் அந்த இழப்பை ஈடுகட்ட முடியும் எனவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், இந்த விவகாரம் எந்த நிலையிலும் மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் பொதுமக்கள் மீது சுமத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தண்டப்பணம் விதிப்பு குறித்து கருத்து தெரிவித்த எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம், கொண்டுவரப்பட்ட நிலக்கரியை திருப்பி அனுப்ப முடியாத சூழ்நிலையில், அவற்றின் தரக்குறைபாடுகளுக்கேற்ப தண்டப்பணம் அறவிடப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், பிணைமுறி மற்றும் நிலுவைத் தொகைகள் உள்ளிட்ட சுமார் 960 கோடி ரூபா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நிதி ரீதியான பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.