மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் CT சிமுலேட்டர் செயலிழப்பு; 1,500 நோயாளிகள் காத்திருப்பு.!!!
• கதிர்வீச்சு சிகிச்சையில் தாமதம்; புதிய இயந்திரத்தின் மென்பொருள் பொருந்தாமையே காரணம் எனத் தெரிவிப்பு.
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் CT சிமுலேட்டர் இயந்திரம் செயற்படாமையினால், கதிர்வீச்சு சிகிச்சை பெற வேண்டிய 1,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் சிக்கியுள்ளதாக அரச கதிர்வீச்சுத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளதுடன், புதிய இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறே இந்த நிலைமைக்குக் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய CT சிமுலேட்டர் இயந்திரத்துக்குப் பதிலாகப் புதிய இயந்திரமொன்று நிறுவப்பட்டு, கடந்த மாதம் வைத்தியசாலை ஊழியர்களிடம் கையளிக்கப்பட்டது. எனினும், புதிய இயந்திரத்தின் மென்பொருள், கதிர்வீச்சுச் சிகிச்சையைத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருளுடன் பொருந்தாததால், அதனைச் செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்திற்குப் பின்னர் பழைய இயந்திரம் அகற்றப்பட்டு புதிய இயந்திரம் நிறுவப்பட்டபோதிலும், இதுவரை அதன் சோதனை நடவடிக்கைகளைக்கூட ஆரம்பிக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, லீனியர் அக்சிலரேட்டர் (Linear Accelerator) மூலம் வழங்கப்படும் கதிர்வீச்சுச் சிகிச்சைகளை ஆரம்பிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பல மாதங்களாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கதிர்வீச்சுச் சிகிச்சையைத் தனியார் மருத்துவத் துறையில் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நோயாளிக்கு 5 இலட்சம் ரூபாய் முதல் 20 இலட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறுவைச் சிகிச்சை அல்லது இரசாயனச் சிகிச்சைக்குப் (Chemotherapy) பின்னர் உரிய காலப்பகுதிக்குள் கதிர்வீச்சுச் சிகிச்சை வழங்கப்படாவிட்டால், புற்றுநோய் செல்களை அழிப்பதில் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, நோயாளர்களின் சிகிச்சையில் மேலும் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், CT சிமுலேட்டர் இயந்திரத்தின் தொழில்நுட்பக் கோளாறுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என அரச கதிர்வீச்சுத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.