அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.!!!
• ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்கவும் நடவடிக்கை.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக அரச சேவை ஆணைக்குழுவின் ஊடாக உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற வாய்மொழி மூலமான வினாக்களுக்கான நேரத்தின்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், ஆசிரியர் – அதிபர் சேவையில் மாத்திரமன்றி, அரச சேவையின் அனைத்துத் துறைகளிலும் நிலவும் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பள அதிகரிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், சுபோதினி குழுவின் பரிந்துரைகளைத் தாண்டியும் கல்விச் சேவை உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.