பிக்குகளை சிறையில் தடுத்து வைக்கும் நடைமுறையில் மாற்றம்; புதிய குழு நியமிக்கப்படும் – ஜனாதிபதி.!!!
பிக்குமார் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் விதம் மற்றும் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் நடைமுறைகள் தொடர்பான சட்டங்களை திருத்தி, புதிய நிலையான கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகளை தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) மகா சங்கத்தினரை சந்தித்து நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிக்குகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இடம்பெற்றதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவில் சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோர் இடம்பெறவுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து, இரண்டு வாரங்களுக்குள் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய நிலையான கட்டளைகளை சமர்ப்பிக்குமாறு குழுவுக்கு பொறுப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பிக்குமார்களை நேரடியாகப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி, அதற்கேற்ப தேவையான மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில், தனிப்பட்ட நபர்களுக்காக விசேட உத்தரவுகளைப் பிறப்பிக்க தாம் தயாராக இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய சட்டங்கள் காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லையெனில், உரிய முறையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதே பொருத்தமான வழி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலுக்கான பின்னணியில், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை சாதாரண உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதமும் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

