வடக்கு, கிழக்கில் தனியார் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்; முடியாதவற்றுக்கு நட்டஈடு – விஜித ஹேரத்.!!!
• பாதுகாப்பு காரணங்களால் விடுவிக்க முடியாத காணிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும் எனவும் உறுதி.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நடவடிக்கைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட சகல தனியார் காணிகளையும் கூடிய விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக விடுவிக்க முடியாத காணிகளுக்கு உரிய நட்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) நடைபெற்ற அமர்வில், நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தடைகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பலாலி உள்ளிட்ட பகுதிகளில் வீதிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றுக்கான தடைகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது அந்த வீதிகள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், வடக்கு மற்றும் கிழக்கில் பெருமளவிலான வீதித் தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் தற்போது இராணுவச் சோதனைச் சாவடிகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், காணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
காணிகளின் சில உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிப்பதுடன், வேறு சிலர் உயிரிழந்துள்ள நிலையில், சிலர் தாமே உரிமையாளர்கள் எனக் கோரிக்கை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நடவடிக்கைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட சகல தனியார் காணிகளையும் கூடிய விரைவில் விடுவிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
அதேநேரம், சில காணிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாலோ அல்லது பாதுகாப்புக் காரணங்களாலோ விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு நியாயமான நட்டஈடு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.