பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் சைபர் தாக்குதல் – விசாரணை ஆரம்பம்.!!!
பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளரின் தலையீட்டுடன் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தின் மீது அடையாளம் தெரியாத தரப்பினரால் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், இணையத்தளத்தில் உள்ள தகவல்களை ஏலத்திற்கு விடுவதன் மூலம் பணம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தத் தாக்குதலினால் அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள முக்கியமான தகவல்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், சில பொதுவான தகவல்கள் மாத்திரமே மற்றுமொரு தரப்பிற்கு சென்றிருக்கலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவும் (Sri Lanka CERT) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையில், திறைசேரியின் வெளிநாட்டு கடன் கொடுப்பனவின் போது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பாகவும் தொழில்நுட்ப ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் கண்டறியும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதுடன், சந்தேகநபர்களை அடையாளம் காணும் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.