ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய அறுவை சிகிச்சை; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.!!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப் பிரிவில் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிறையில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (12) அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உடனடியாக விசாரித்து அறிவிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டார்.
சிறை அதிகாரிகளிடமிருந்து உரிய அறிக்கை கிடைக்கும் வரை, குறித்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.