போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம்: குடிவரவு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் கைது.!!!
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின்படி, இந்தியாவின் சென்னை நகரிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்துடன், வேறொரு நபரின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டு விண்ணப்பம் முறையான பரிசோதனையின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கு சந்தேகநபர் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்பட்டுள்ள வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.