கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்; முழு ஆதரவு வழங்க உறுதி.!!!
புற்றுநோயாளர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இலவச சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கி வரும் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு, அதன் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (05) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் மற்றும் தங்கியிருக்கும் புற்றுநோயாளர்களை நேரில் சந்தித்த அவர், அவர்களுடன் கலந்துரையாடி உடல்நிலை, தேவைகள் மற்றும் நலன் தொடர்பில் கேட்டறிந்தார். நோயாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கான சேவைகள் தொடர்ச்சியாக வலுப்பெற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பின்னர், நிலையத்தின் தலைவர் பௌஸ் ஹாஜியார் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர், நிலையத்தின் தற்போதைய செயற்பாடுகள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தார்.
புற்றுநோயாளர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் நிலையத்தின் பணிகளைப் பாராட்டிய அவர், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தேவைகளுக்குத் தன்னால் இயன்ற முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பண்ணை மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்ட வசதிகளையும் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர், அவற்றின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால பயன்பாடுகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.




