இலங்கை கடற்பரப்பில் மீன்வளம் படிப்படியாக வீழ்ச்சி; மாற்று வாழ்வாதார திட்டங்கள் குறித்து கவனம்.!!!
இலங்கையின் கடற்பரப்பில் மீன்வளம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைந்து வருவதாக தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையமான நாரா (NARA) தெரிவித்துள்ளது.
இது இலங்கைக்கு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளின் கடல்சார் உயிரியல் அமைப்புகளையும் பாதிக்கும் பொதுவான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக நாரா அமைப்பின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை திடீரென ஏற்பட்டதல்ல என்றும், மீன்வளம் வீழ்ச்சியடைவதற்கான ஒரே ஒரு குறிப்பிட்ட காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடல்சார் உயிரியல் அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் எல்நினோ காலநிலை மாற்றம் இந்த வீழ்ச்சியில் தாக்கம் செலுத்துகிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், இலங்கை இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை நீண்டகாலத்துக்கு தொடருமானால், கடற்றொழில் சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அவர்களை மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை நோக்கி வழிநடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒரு தீர்வாக மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் தற்போதைய முன்னேற்றம் திருப்திகரமான நிலையில் இல்லை என பேராசிரியர் சனத் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.