ஹோர்முஸ் கடல் போக்குவரத்துத் தடையால் இலங்கை ஊடாக புதிய சரக்கு பாதை திறப்பு.!!!
• 14 அதிநவீன லெம்போர்கினி சொகுசு கார்கள் டுபாய், கட்டார் நோக்கி விமானம் மூலம் அனுப்ப நடவடிக்கை.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்துப் பாதையொன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன லெம்போர்கினி ரகத்தைச் சேர்ந்த 14 சொகுசு கார்கள், இலங்கை ஊடாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் கட்டார் நாட்டின் தோஹா நகரங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கார்கள் இத்தாலியில் இருந்து கடல் மார்க்கமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பின்னர், 40 அடி நீளமுடைய ஏழு கொள்கலன்களில் அவை ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, குறித்த வாகனங்கள் சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் மற்றும் கட்டாரின் தோஹா நகரங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த லெம்போர்கினி கார்கள் ஒவ்வொன்றின் குறைந்தபட்ச விலை இலங்கை நாணய மதிப்பில் சுமார் 50 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஸ்போர்ட்ஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு காரின் விலை சுமார் 100 கோடி ரூபா வரை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன சொகுசு மோட்டார் வாகனங்களை ஏற்றிய சரக்கு விமானம், இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து டுபாய் மற்றும் தோஹா நோக்கிப் புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.