எரிபொருள் இறக்குமதிச் செலவு உயர்வு; 2025ஐ விட 1.17 பில்லியன் டொலர் அதிகம்.!!!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவினம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்களினால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என நாடாளுமன்றத்தில் இன்று (21) எழுப்பப்பட்ட வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
எனினும், 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,995 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே செலவிடப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம், கடந்த ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு சுமார் 1,173 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.