மட்டக்களப்பில் ஆகஸ்ட் 22 முதல் தினசரி நீர்வெட்டு; உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் குறைவு.!!!
–எம்.ரி.எம்.யூனுஸ்–
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான நீர்வழங்கலை மேற்கொள்வது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தினசரி நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை உத்தேச நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை, நீர்ப்பாவனையாளர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்வெட்டு காரணமாக ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எஸ். ஜயந்தன் விடுத்துள்ளார்.
