மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜனாதிபதி மீளாய்வு; நிதி ஒழுக்கத்துடன் செயல்பட வலியுறுத்தல்.!!!
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமையின் வளர்ச்சிகளைக் கருத்திற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குமாறும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் மாதத்திற்குள் விரைவாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மாகாண சபைகளினால் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி தலைமையில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாகாண மட்டத்தில் தற்போது 30,923 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றின் முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், விவசாயம், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய அரசும் மாகாண சபைகளும் ஒரே தேசியக் கொள்கையின் கீழ் தங்களது துறைசார்ந்த திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தேசிய கொள்கைகளின் அடிப்படையில் வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவது மத்திய அரசின் பொறுப்பாகவும், அவற்றை செயற்திட்டங்களாக வடிவமைத்து நடைமுறைப்படுத்துவது மாகாண மட்டத்தில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திட்டங்கள் இரட்டிப்பாவதைத் தவிர்ப்பதற்காக அரச பொறிமுறையில் தரவுகளும் தகவல்களும் திறம்படப் பரிமாறப்பட வேண்டும் என்றும், முறையான ஒருங்கிணைப்பின் மூலம் தேவையற்ற திட்டங்களுக்கு வளங்கள் வீணாவதைத் தடுத்து, அவசியமான திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டுக் கடன் மற்றும் நிதி உதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமாகவும், உரிய காலத்தில் நிறைவுசெய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், கடுமையான நிதி ஒழுக்கத்தைப் பேணி, உரிய செலவீன எல்லைக்குள் செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டும் என்றும், அடுத்த ஆண்டுக்கான வேலைத்திட்டங்களை உரிய நேரத்தில் ஆரம்பிக்கக் கூடிய வகையில் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டமிடல் பணிகளையும் பூர்த்தி செய்யுமாறும் பணிப்புரை விடுத்தார்.
நீர்ப்பாசனப் பணிகளுக்கு ஒருங்கிணைந்த தேசியத் திட்டம்
கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மாகாண சபைகள் ஆகிய மூன்று நிறுவனங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன மறுசீரமைப்புப் பணிகள், தேசிய மட்டத்திலான ஒருங்கிணைந்த திட்டத்தின்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பல்வேறு வெளிவாரித் திட்டங்களின் கீழ் சிதறிக்கிடக்கும் குளங்களின் புனரமைப்புப் பணிகளை ஒரே மத்திய நிலையத்தின் கீழ் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில், சிறுபோகத்திற்குப் பின்னரும் பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னரும் உள்ள குறுகிய காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களின் கொள்ளளவை அதிகரித்து, அவற்றை உடனடியாகப் புனரமைக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இதற்காக வழங்கப்பட்டுள்ள நிதியை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தி, குளப் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.
பாடசாலை மறுசீரமைப்புக்கும் விசேட கவனம்
பாடசாலைக் கட்டமைப்பை மீள ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தவிர்ப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
50 பேருக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இணைப்பது தொடர்பில் முடிவெடுக்கும்போது, சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு நேரில் சென்று அவற்றின் பௌதிக நிலைமைகள் மற்றும் தரவுகளை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவோ அல்லது தேவைப்பட்டால் கொடுப்பனவு வழங்கவோ அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அனைத்து மாகாண சபைகளிலும் நிலவும் பொதுவான பிரச்சினையான தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறை குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், தொழில்நுட்ப உதவி அதிகாரிகளை இணைத்துக்கொண்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கும் விரைவான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.
மேலும், டித்வா அனர்த்த நிலைமைக்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா நிதியில், 102 பில்லியன் ரூபா மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய திட்டங்களை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.






