தலைநகரில் வெள்ள அபாயம் தீவிரம்: கனமழையால் கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.!!!
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெள்ள அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பின் பல தாழ்நிலப் பகுதிகள் தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி ஆற்றுப்படுகைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ருவன்வெல்ல, சீதாவக்க, டொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யதியந்தோட்ட மற்றும் புலத்கொகுபிட்டிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலை உருவாக வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
களனி ஆற்றுப்படுகையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுமார் 300 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்று நீர்மட்டங்கள் மற்றும் மழை நிலவரங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், சாரதிகள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.