உலக எண்ணெய் விலை இலங்கையின் பணவீக்கத்தை தீர்மானிக்கும் – மத்திய வங்கி ஆளுநர்.!!!
உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இந்த ஆண்டின் இறுதி வரை சுமார் 80 அமெரிக்க டொலர் மட்டத்தில் நிலைத்திருந்தால், இலங்கையின் பணவீக்கத்தை மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை நோக்கி வெற்றிகரமாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடரும் பொருளாதார மீட்சி
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இலங்கை தொடர்ச்சியான பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நான்கு வருட வேலைத்திட்டம் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிறைவடையவுள்ளது.
இதற்கமைய, அடுத்தகட்ட மீளாய்வு நடவடிக்கைகள் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், இலங்கையின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.