முஸ்லிம் யுவதிகளின் ஆடை உரிமை: சுற்றறிக்கையை மாற்ற அரசு தயார் – அமைச்சர் நளிந்த.!!!
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடை விவகாரம் தொடர்பில், தேவையானால் சுகாதாரத் துறையின் சுற்றறிக்கையில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் நாடாளுமன்றில் கொண்டுவந்த ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் அணுக வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இனவாத அல்லது மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான கருத்துகள் மற்றும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் தெரிவித்தார்.
பல இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகளைக் கொண்ட இலங்கையில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்துவமான கலாசாரங்கள், ஆடை முறைகள், உணவு மற்றும் வழிபாட்டு நடைமுறைகள் காணப்படுவதாகவும், அவற்றின் ஒற்றுமையே நாட்டின் பலமாக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கல்முனை மருத்துவமனை விவகாரம் தேவையற்ற இன அல்லது மத மோதலாக உருவெடுக்காமல் தடுப்பதற்காக அரசாங்கம் சட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் சீருடைகள் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஊழியர்களை எளிதில் அடையாளம் காணவும், சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சீருடைகளில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் சீருடைக் குழுவின் ஆலோசனையும் ஒப்புதலும் அவசியம் என அமைச்சர் விளக்கினார்.
2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் சீருடை உரிமையுள்ள ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, செவிலியர்களுக்கு ரூ.30,000, குடும்ப சுகாதார அதிகாரிகளுக்கு ரூ.28,000, சுகாதாரப் பரிசோதகர்களுக்கு ரூ.30,000 மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு ரூ.18,600 என சீருடைக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையில், கிழக்கு மாகாணத்தில் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்படாமல் தொடரவும், இனவாத உணர்வுகளைத் தூண்டும் நிலைமைகள் உருவாகாமல் தடுக்கவும் சில ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
“சீருடையில் மாற்றம் தேவைப்பட்டால், அதற்கான யோசனைகளை சீருடைக் குழுவிடம் சமர்ப்பித்து, கலந்துரையாடல்களின் பின்னர் சுற்றறிக்கையில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும். ஆனால், தற்போதைக்கு நடைமுறையில் உள்ள சுற்றறிக்கைக்கு அமைவாகவே ஊழியர்கள் செயற்பட வேண்டும்” என அமைச்சர் வலியுறுத்தினார்.
சமீபகாலமாக முஸ்லிம் யுவதிகள் சுகாதாரத் துறையில் இணைவதில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய ஆடை தொடர்பான காரணங்களால் ஒருவர் அரச சேவையில் இணைவதற்கு தடைகள் ஏற்படுவதை அரசாங்கம் ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து சமூகத்தினரும் சுகாதாரத் துறையில் இணைவதற்கும், அவர்களின் மத மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.