உலகின் சிறந்த தீவுகள் பட்டியலில் இலங்கை முதலிடம்; 2026 தரவரிசையில் சர்வதேச அங்கீகாரம்.!!!
சர்வதேச பயண மற்றும் சுற்றுலாத் தலங்கள் தரவரிசை நிறுவனம் வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தீவுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் பதிவான பயணிகளின் கருத்துகள் மற்றும் நிறுவனத்தின் தலையங்கக் குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இயற்கை எழில், பன்முக சுற்றுலாத் தலங்கள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான பயண அனுபவங்கள் ஆகியவை இந்த சாதனைக்கான முக்கிய காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் இலங்கை, அண்மைக் காலங்களில் தனது சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுவருகிறது. இந்த அங்கீகாரம், நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தரப்புகள் இந்த சாதனையை வரவேற்றுள்ளதுடன், இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலா இலக்குகளில் ஒன்றாக மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இது அமையும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.