சட்டவிரோத மீன்பிடி; 4 பேர் கைது – 1,900 கிலோ மீன்கள் பறிமுதல்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-
யாழ்ப்பாணம், சுண்டிகுளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் வெள்ளிக்கிழமை (11) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையின் படகுகள் மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 4 சந்தேகநபர்கள், 3 டிங்கி படகுகள் மற்றும் 1,900 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி மற்றும் பள்ளிவாசல்பாடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், படகுகள் மற்றும் மீன் தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.




