2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று முதலாம் வாசிப்பு.!!!
• வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12ஆம் திகதி; குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல்.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு இன்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நவம்பர் 12ஆம் திகதி 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்படவுள்ளது. அன்றைய தினமே ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பும் இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
இவ்விவாதத்தின் முடிவில், நவம்பர் 20ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் திட்டமிட்ட கால அட்டவணைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளன.