இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி; இந்திய மீன்பிடிப் படகுடன் 09 மீனவர்கள் கைது.!!!
– கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ் –
யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்கு தெற்கே சர்வதேச கடல்சார் எல்லைக் கோட்டை (IMBL) மீறி, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் அதிலிருந்த 09 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவிற்கு தெற்கே இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்திருந்த பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர கண்காணித்துள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ஒரு இந்திய மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதிலிருந்த 09 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதனைத் தொடர்ந்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட மீனவர்களும், மீன்பிடிப் படகும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.



