இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ‘INS SINDHUKESARI’ இலங்கையிலிருந்து புறப்பட்டது.!!!
-கற்பிட்டி – எம். எச். எம். சியாஜ்-
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல் தனது செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றியதையடுத்து இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இக்கப்பல் செயல்பாட்டு தேவைகளுக்காக 2026 மே 04 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. பின்னர் தனது திட்டமிட்ட பணிகளை நிறைவு செய்ததையடுத்து இன்று (06) இலங்கையிலிருந்து புறப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பலுக்கு மரியாதையுடன் பிரியாவிடை வழங்கினர்.
இந்நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையை வந்தடைந்தபோது, அதன் கட்டளை அதிகாரியும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
மேலும், கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளிலும் கப்பல் குழுவினர் பங்கேற்றனர்.
அத்துடன், இலங்கை கடற்படை வீரர்களுக்கு இந்நீர்மூழ்கிக் கப்பலை நேரில் பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டதுடன், கப்பல் குழுவினரும் நாட்டின் பல கவர்ச்சிகரமான சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.









