தமிழ் – சிங்கள மக்களிடையே இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் மொழிக்கல்வி; கிழக்குப் பல்கலைக்கழகமும் CASED உம் இணைந்து புதிய முயற்சி.!!!
• ஆறு மாத சிங்கள மொழித் திறன் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதுடன், தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் சமூகங்களுக்கிடையே பரஸ்பர புரிதலையும் தொடர்பாடலையும் வலுப்படுத்தும் நோக்கில், கிழக்குப் பல்கலைக்கழகமும் CASED நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த சிங்கள மொழித் திறன் திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
2026ஆம் ஆண்டுக்கான இவ்விழா, ஒக்டோபர் 20ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கூட்ட அரங்கில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவும் CASED நிறுவனமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் சமூகங்களுக்கிடையிலான மொழித் தடைகளைக் குறைத்து, பரஸ்பர புரிதல், நம்பிக்கை மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் கீழ், தமிழ் மொழி பேசும் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்குச் சிங்கள மொழியைக் கற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் சமூகங்களுக்கிடையிலான தொடர்பாடலை மேம்படுத்துவதுடன், அமைதியான சகவாழ்வையும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாகப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் எஸ். அரசரத்தினம் மற்றும் CASED நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எச். எம். அன்வர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன், தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையில் சிங்கள மொழித் திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மொழித் திறன்கள் இளம் பட்டதாரிகளின் தொடர்பாடல் ஆற்றலை மேம்படுத்துவதுடன், அவர்களின் தொழில் வாய்ப்புகளையும் விரிவுபடுத்த உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, பேராசிரியர் எஸ். அரசரத்தினம் பங்கேற்பாளர்களை வரவேற்றதுடன், திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்குத் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான புரிதலை மேம்படுத்துவதில் இத்திட்டம் ஆற்றிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
ஆறு மாத சிங்கள மொழித் திறன் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் முக்கிய நிகழ்வாக இச்சான்றிதழ் வழங்கும் விழா அமைந்தது.
மொழிக்கல்வி என்பது வெறுமனே ஒரு மொழியைக் கற்பதற்கான செயற்பாடு மட்டுமல்ல; அது சமூகங்களுக்கிடையே உறவுகளை உருவாக்கும் பாலமாகவும் அமைகிறது என்பதை இத்திட்டம் எடுத்துக்காட்டுகிறது. மொழித் தடைகளைக் குறைத்தல், பரஸ்பர மரியாதையை வளர்த்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் போன்றவற்றில் இத்தகைய முயற்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
இத்திட்டத்தின் வெற்றிக்குப் பங்களித்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், நிர்வாகத்தினர், தொழில் வழிகாட்டல் பிரிவு, கல்விப் பணியாளர்கள், ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் CASED நிறுவனம் நன்றியைத் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான கல்விசார் ஒத்துழைப்பின் ஊடாக இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், அமைதியான சகவாழ்வை ஊக்குவிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஒன்றுபட்ட இலங்கையைக் கட்டியெழுப்பவும் கிழக்குப் பல்கலைக்கழகமும் CASED நிறுவனமும் தமது பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளன.







