இலங்கையில் கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு; ஒரு கிலோகிராமுக்கு 13 ரூபா உயர்வு.!!!
இலங்கையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோதுமை மாவின் விலை உயர்வால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளிலும் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் நுகர்வோர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்கனவே வாழ்க்கைச் செலவு தொடர்பான சவால்களை எதிர்கொண்டு வரும் பொதுமக்களுக்கு, கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மேலதிக சுமையை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.
எனினும், பாண் மற்றும் ஏனைய பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.