மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை.!!!
• 30 உயிருள்ள தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்கு ரூ.25,000 அபராதம்; செலுத்தத் தவறினால் 3 மாத சிறை.
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 ரக துப்பாக்கி ஒன்றையும் அதற்கான 30 உயிருள்ள தோட்டாக்களையும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்பட்ட வாழைச்சேனை – பேத்தாளை பகுதியைச் சேர்ந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2014 செப்டெம்பர் 12ஆம் திகதி, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பகுதியில் வைத்து குறித்த நபர் T-56 ரக துப்பாக்கி மற்றும் 30 உயிருள்ள தோட்டாக்களுடன் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சட்டவிரோதமாக T-56 ரக துப்பாக்கியை உடமையில் வைத்திருந்தமை மற்றும் 30 உயிருள்ள துப்பாக்கித் தோட்டாக்களை வைத்திருந்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், எதிராளி சார்பில் சட்டத்தரணி பிரகாஷ் ஆஜராகியதுடன், பொலிஸார் சார்பில் அரச சட்டவாதி எஸ். அனுஷன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், குறித்த நபர் 2026 ஆகஸ்ட் 24ஆம் திகதி நீதிமன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். இதனையடுத்து, தண்டனை தொடர்பான தீர்ப்பு செப்டெம்பர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதலாவது குற்றமான சட்டவிரோதமாக T-56 ரக துப்பாக்கியை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டாவது குற்றமான 30 உயிருள்ள துப்பாக்கித் தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.