கடலுக்குச் சென்ற 2 மீனவர்கள் மாயம்; விசேட தேடுதல் நடவடிக்கையில் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு.!!!
மன்னார் வடக்கு கடற்பகுதியில் விபத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு நாள் மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள், கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் இந்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 19.09.2026 அன்று இரு மீனவர்களுடன் IDAY-A-0126-JFN என்ற இலக்கமுடைய ஒரு நாள் மீன்பிடிப் படகு கடலுக்குச் சென்றுள்ளது.
குறித்த படகு மீண்டும் மீன்பிடித் துறைமுகத்திற்குத் திரும்பாத நிலையில், அதனைக் கண்டுபிடிப்பதற்காக கடற்படையின் உதவியை வழங்குமாறு மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டதுடன், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளுக்கும் தகவல் வழங்கப்பட்டது.
இதற்கமைய, வடமத்திய கடற்படை கட்டளையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடல் நடவடிக்கையின்போது, தலைமன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் எரிபொருள் இன்றி செயலிழந்து கடலில் மிதந்து கொண்டிருந்த குறித்த மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, படகில் இருந்த இரு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், மீன்பிடிப் படகும் மீனவர்களும் தலைமன்னாருக்கு அழைத்துவரப்பட்டனர்.
தலைமன்னாரில் மீனவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளும் வழங்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கியுள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக கடற்படையினர் தொடர்ந்தும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





