மருதானை புகையிரத நிலையத்தில் பாரிய மாற்றம் – நவீனமயமாக்கல் முதற்கட்டப் பணிகள் நிறைவு.!!!
தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மருதானை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 100 புகையிரத நிலையங்களை மேம்படுத்தும் “சிஹின கமனந்தய” (கனவு இலக்கு) திட்டத்தின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களம், என்.ஐ.ஓ பொறியியல் நிறுவனம், தனியார் துறை மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு இந்தச் சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
வரலாற்றுச் சிறப்புமிக்க புகையிரத நிலையங்களின் பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாத்தபடி, பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்துவது ஒரு முக்கிய மைல்கல்லாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மருதானை நிலையத்தை உலகத் தரமான போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான ஆரம்பமே இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்பர் பிரதர்ஸ் (Pvt) Ltd நிறுவனத்தின் 35 மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் இந்த முதற்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையில் ஆறு மாத காலமாக நடைபெற்ற இச்சீரமைப்பில், நூற்றாண்டு பழமையான கட்டிடத்தின் கலைநயம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதவிர சிசிடிவி (CCTV) கண்காணிப்பு மற்றும் நவீன மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதோடு, சுகாதார வசதிகள் முழுமையாக மேம்படுத்தப்பட்டு, உட்புற மற்றும் வெளிப்புறப் பகுதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் நில அலங்காரம் (Landscaping) மற்றும் கட்டிடப் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மேல்மாடி கூரையின் 2,000 சதுர அடிக்கும் அதிகமான பகுதி நீர் உட்புகாதவாறு (Waterproofing) பலப்படுத்தப்பட்டுள்ளது.
மருதானை புகையிரத நிலையம் தற்போது புதிய பொலிவுடன் பயணிகளின் பயன்பாட்டிற்காகத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.











