காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸின் 32ஆவது பேராளர் மாநாடு; புதிய நிர்வாகப் பதவிகள் அறிவிப்பு.!!!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 32ஆவது பேராளர் மாநாடு இன்று (16) புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேராளர் மாநாட்டில், கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளைத் தவிர்ந்த ஏனைய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும், செயலாளராக சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாநாட்டில் கட்சியின் பதவி நிலை முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தக்பீர் முழக்கத்துடன் வரவேற்பு
பேராளர் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னதாக, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தின் நுழைவாயிலில் வைத்து கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம், புதிய தவிசாளர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை பேராளர்கள் தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலமாக மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.
கட்சியின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டதுடன், பேராளர் மாநாடு கட்சி உறுப்பினர்கள் மற்றும் பேராளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.











