கிழக்கில் காணி அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி; களத்தில் இறங்கிய விசேட குழு – 2 மாதங்களில் அறிக்கை.!!!
• அனுமதியற்ற காணி அபகரிப்புகள் தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்.
கிழக்கு மாகாண காணிகளை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண காணி பாதுகாப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சட்டவிரோத காணி அபகரிப்புகளைத் தடுப்பது, கடற்கரைப் பகுதிகளை பாதுகாப்பது மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து காணி பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளில் இடம்பெறும் அனுமதியற்ற கட்டுமானங்கள், அரச காணிகளை அபகரித்தல் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல்கள் கோரப்பட்டன.
குறித்த விடயங்கள் தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அருகம்பே கடற்கரைப் பகுதியில் இடம்பெறும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்றைப் பெறவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அறிக்கைகளைத் தயாரிக்கும் போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடமிருந்தும் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண காணி பாதுகாப்புக் குழுவின் தலைவர் சேனக பள்ளியகுருகே உள்ளிட்ட குழுவின் ஏனைய அரச அதிகாரிகள், கடற்கரைப் பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி. டர்னி பிரதீப் குமார், வனப் பாதுகாப்பு நாயகம் டபிள்யூ.டபிள்யூ.எம்.பி.எஸ்.சி. பாலமகும்புர மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுல அமரரத்ன உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

